Sunday, May 24, 2009

பிரிந்த காதல் - சிறுகதை

குறிப்பு: இந்த கதையில் வரும் பெயர்களும் நிகழ்வுகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. எந்தவிததிலாவது இதில் இடம்பெறும் நிகழ்வுகள் உங்களை குறிப்பதாக இருப்பின் அது எதேச்சையானதே. அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த கதையின் உரிமை என்னை சேர்ந்தது. இதை வேறு எங்கும் பிரசுரிக்கவோ, பதிப்பிக்கவோ உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிய படுத்தலாம்.
-----------------------------------------------------------

சேகர் நீ போய் புனிதாவிடம் பேசு. இனியும் தாமதிக்காதே” ராஜு தீர்க்கமாக சொன்னான்.

ஆமாம் நீ சொல்றதும் சரிதான். மூணு வருஷ இடைவெளி கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் அவளும் என்னை மாதிரிதான் நினைத்துக் கொண்டிருப்பா.”

சரிடா, நான் வர்ற ஞாயிற்றுகிழமையே அவளை சென்னையில் சந்தித்து மனம் விட்டு பேசறேன்.” சேகர் தீர்மானித்து விட்டான்.

“அட்ரா சக்க. ஞாயிறு காதலர் தினம்டா. அசத்துறா மச்சீ” ராஜு சேகரின் முதுகை தட்டிகொடுத்தபடியே பேசினான்.

***********************

சேகர் ஹைதராபாத்திற்க்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அவனுக்கு இப்போது 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். நிறம் சற்று கருப்புதான். ஒல்லியான உடல்வாகு. இருந்தாலும் அவனின் கல்லூரி கால பிரிந்த காதல் நினைவில் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கல்லூரி என்றாலே காதல் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சில காளையர்களுக்கு! அது எவ்வளவு ஹட்டு ஃபிகர் என்றாலும் வளைத்து போட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு ‘அவ என் ஆளு’ என்று நண்பர்களிடம் சொல்லிக்கொள்ள அலாதி ஆசை. புனிதா சற்று வண்ணம். ஒடிசலான தேகம். படிப்பில் சுமார் அவ்வளவுதான். புனிதாவை மடக்க எத்தனை பேர் படையெடுத்தாலும் நம்ம சேகர் செம வேகம். எல்லோரையும் ஓரங்கட்டி அவள் மனதில் முதல் ஆளாக – “அவளின் ஆளா”க இடம் பிடித்தான்.

காதலில் பல நாட்கள் ஓடியது. இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு. சிறிய சிறிய சண்டைகள் வந்து போய்க் கொண்டு இருந்த சமயம். அன்று ஆகஸ்டு 6 – மாலை கல்லூரி முடிந்து ஹாஸ்டல் செல்லும் வழியில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதி. மாணவர்கள் காதல் செய்யவே காலேஜ் நிர்வாகம் மரம் வளர்த்தது போல் இருந்தது.  ஒவ்வொரு மரத்தையும் கேட்டால் ஆயிரம் ஆயிரம் காதல் கதை சொல்லும். விவேக் ஒரு படத்தில் சொல்வது போல் புதர் ஒழிப்பு கழகம்னு ஒண்ணு ஆரம்பித்தால் தான் எல்லாம் சரியா வரும். சேகரும் புனிதாவும் வழக்கம்போல் உட்காரும் மரத்தடியில் இருந்து கொண்டு கேலியும், கிண்டல்களும், ஓட்டல்ஸ்களும் நிறைந்த பேச்சுகள். நெருக்கம் அதிகமாக சேகர் கேட்டே விட்டான்.

புனி இவ்வளவு நாள் நாம பழகி இருக்கோம். ஒரே ஒரு முத்தம் தாயேன்.” அவ்வளவுதான்.

புனிதா கண்கலங்க ஆரம்பித்தாள்.

சேகர் - “ஏய் என்ன ஆச்சு? ஏன் அழுவற?”

“என்னடா இப்படியெல்லாம் பேசற? இனி என்னிடம் பேசாதே போடா.” அழுகையும் கோபத்துடனும் ஆன கத்தலுடன் கூறிக்கொண்டே வேகமாக
நடக்க.. ம்ஹும்.. ஓட ஆரம்பித்தாள் புனிதா.

“புனி புனி.. இரு.. இரு.. நான் அப்படி என்ன கேட்டுட்டேன்? ஏன் இதற்கு போய் ரொம்ப சீன் போடுற?”

ஓவென்று அழுகை அதிகமானது.

”சரி விடு. என்னை மன்னிச்சிடு. உன்னை மாதிரி அசடுகிட்ட இதெல்லாம் பேசினது தப்புதான். எல்லோரும் பார்ப்பாங்க. இத பாரு. ஃபர்ஸ்டு அழுகையை நிறுத்து”

மறுநாளில் இருந்து புனிதா பேச, பழக மறுத்தாள். இரண்டு மாதங்கள். ஒரு சின்ன முத்தம் கேட்டது இவ்வளவு பெரிய தப்பா? என்னடா இது! ஒன்றும் விளங்கவில்லை சேகருக்கு.

புனிதா சேகர் விஷயம் தெரிந்த சில நண்பிகள் மூலம் - சேகரின் நண்பர்கள் இருவரும் பேச ஒருவாறு ஏற்பாடு செய்தனர்.

சேகர் புனிதாவை பார்த்து ”இன்னும் என் மேல கோபம் தீரலையா?”
தரையை பார்த்துகொண்டே புனிதா அசடு வழிய பேசினாள் - “இல்ல...... முத்தம் கொடுத்தா கொழந்த பொறக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதான் ஒரே பயமா போச்சு. செல்வி போன வாரம் தான் விளக்கி சொன்னா. அதான் என்னை நினைச்சி எனக்கே ரொம்ப வெட்கமா போச்சு.”

அவள் சொல்லி முடித்ததும் சேகர் சிரித்து விட்டான். இருவரும் சிரித்து
விட்டார்கள்.

அப்புறம் முத்தம் கிடைத்ததா, வேறு எதாவது நடந்ததா என்பது எல்லாம் இங்கே சென்ஸார்டு.

நான்காம் ஆண்டு மத்தியில். பெரும்பாலோனோருக்கு வேலை கிடைக்க ஆரம்பித்து விட்டது. இன்றைய கம்பெனி இண்டர்வூவில் புனிதா செலக்ட் ஆகிவிட்டாள். புனிதா வீட்டிற்க்கு முன்னரே சென்று விட்டதால், சேகரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவளிடம் சொல்ல சொன்னார்கள் அவளின் நண்பர்கள். சேகர் சும்மா விளையாட நினைத்தான். வினையே இப்போது தான்.
வேண்டுமென்றே அவளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொல்ல – அவள் வீட்டில் என்ன நடந்ததோ. புனிதா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். இவனை அடிக்க ஆள் அனுப்பினான் அவள் தம்பி. இதற்கு பிறகு, புனிதா பல மாதங்கள் சேகருடன் பேசவில்லை. என்னவோ தெரியவில்லை இவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் போல.

பிறகு புனிதாவும் சேகரும் ராசியானர்கள். எவனோ ஒருவன் இவர்களின் காதலை வீட்டில் வத்தி வைக்க – இரண்டாவது முறையாக புனிதா அம்மா ஆஸ்பத்திரியில்.

அதன் பிறகு எல்லா பேச்சுக்களும் போனில் தான். வெவ்வேறு ஊர்களில் வேலை. காதலை பற்றி பேச ஆரம்பித்தாலே வாக்குவாதம். மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. புனிதாவுக்கு பையன் பார்க்க போவதாக ஒரு செய்தி. ராஜுவிடம் அறிவுரை கேட்டு இன்று தான் சேகர் புனிதாவிடம் மனம்விட்டு பேச முடிவு எடுத்தான்.

***************************

பிப்ரவரி 13 - கையில் ஒரு பேக்குடன் இரவு 9பது மணிக்கு சேகர் ரயில்
நிலையம் வந்தான். அவனுக்கு 10.15 மணிக்கு தான் சென்னை எக்ஸ்பிரஸ். எப்போதுமே ரயில் நிலையம் வந்து தான் சாப்பிடுவான். மெதுவாக ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டே நாளை என்ன பேசுவது என்று அசை போட்டுகொண்டிருந்தான். ரொம்ப நாள் பேசாமல் திடீரென்று ஒருநாள் வாழ்க்கை முழுவதையும் மாற்ற போகும் பேச்சை எப்படி பேசுவதோ! பெருமூச்சு விட்டுக்கொண்டான். சாப்பிட்டபின் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கிக்கொண்டு பிளாட்பாரம் 5ல் வந்து நின்றான்.

“டேய் சேகர்.. என்னடா எப்படிடா இருக்க?” திடீரென்று ஒருகுரல் அவன்
அருகில் இருந்து.

சற்று பருத்த - கண்ணாடி அணிந்த நடுத்தர வயது ஒருத்தன் கையில் ஒரு சின்ன குழந்தையுடன். யாரென்று அடையாளம் தெரியவில்லை சேகருக்கு.
“யாருன்னு தெரியலயா.. நான் தாண்டா EEE வேணு. CSE சில்பி ஆளு.”
சில வினாடிகள் கழித்து - “இன்னுமா தெரியல.” என்றான் வேணு.

சேகருக்கு இப்போது தான் ஞாபகம் வந்தது. “டேய் மாப்ள. என்னடா இவ்வளவு வளந்துட்ட? அடையாளமே தெரியலடா”

வேணு பேச ஆரம்பித்தான் - ”காலேஜ் முடிச்சதுமே நானும் சில்பியும் அவங்க அவங்க வீட்டில் எங்க காதலை சொல்லி சம்மதம் வாங்கிட்டோம். ஆனால் அவ அக்காவால கல்யாணத்துக்கு இரண்டு வருடம் காத்திருக்க வேண்டியதா போச்சு. போன வருஷம் கல்யாணம். இதோ எங்க கொழந்த - அவினாஷ். நான் இப்ப MSல் வேலை செய்யறேன். சில்பி வீட்டில கொழந்தய பார்த்துக்கறா. நான் மாட்டிக்குனு என் புராணமா படிச்சிக்கினு இருக்கேன்.”

வேணு எப்பவுமே கொஞ்சம் லொட லொடா டைப். உருவம்தான் சேஞ்ச் மற்றபடி அவன் காலேஜில் இருந்த மாதிரியே இருக்கான்.

”“நீ என்ன பண்ற? உன் ஆளு புனிதா என்ன பண்றா? உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இல்லேனா எப்போ? சொல்டா” கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தான் வேணு.

சேகர் சொல்ல ஆரம்பித்தான் “நான் இங்கதான் otto labsல ஒர்க் பண்றேன். இன்னும் எனக்கும் புனிதாவுக்கும் கல்யாணம் நடக்கல. அது விஷயமாதான் சென்னை போறேன். கூடிய சீக்கிரம் நல்ல சேதியோட உன்னை சந்திக்கிறேன்.”

“ஆமாம் நீ மட்டுமா தனியா கொழந்தயோட வந்த? சில்பி எங்க?” என்று சேகர் முடிக்க.

வேணு ”அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா. நான் ஏசியில புக் பண்ணி இருக்கேன். அவ அங்க எங்கள தேடிகிட்டு இருப்பா. முடிஞ்சா சென்னையில மீட் பண்ணுவோம். சில்பி கிட்ட உன்னை சந்திச்சதா சொல்றேன். உன் மொபைல் நம்பர் கொடு”

நம்பரை இருவரும் பரிமாறிக்கொண்ட பின் வேணு ஓட்டமும் நடையுமாக கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்றான்.

ரயில் வண்டி ஐந்து நிமிடம் லேட்டாக கிளம்ப்பியது. சேகருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. எப்போது சென்னை செல்வோம் என்றே எண்ணம் எல்லாம். காலேஜ் நினைவுகள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது.

**********************

பிப்பரவரி 14 - காலை 9 மணி. சேகர் புனிதாவின் செல்லுக்கு ரிங்கினான்.
சேகர் உற்சாகமாக “புனி குட் மார்னிங். எப்படி இருக்க?”
புனிதா அதே உற்சாகத்துடன் ”மார்னிங் சேகர். நான் நல்லா இருக்கேன். எப்ப சென்னை வந்த? பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா?”

“எல்லாம் எக்ஸலண்ட் புனி. நாம எப்ப மீட் பண்ணலாம்? எங்க?”

”நீயே சொல்லு” காலேஜ் படிக்கும்போதும் இதே பதில்தான் அவள் சொல்வாள்.

”காந்தி பீச் - 5 மணிக்கு? ஒகேவா?”

“ஒகே. அதுக்கு முன்னாடி 2 மணிக்கு சிட்டி சென்டர்ல படம் போலாமா? நான் இரண்டு டிக்கெட் புக் பண்ணினேன். என் ரூம்மெட் கடைசி நிமிஷத்தில கழுத்த அறுத்திட்டா. உனக்கு வேற வேலை எதாவது இருக்கா?”

“ ஓ நோ. வித் பிளஷர்.” சேகர் மனம் பிரபுதேவா போல் டான்ஸ் ஆடியது. இப்படி ஒரு தருணம் எப்படிதான் கடவுள் அமைக்கிறாறோ என்று வியந்தான்.

“சரி நான் வந்துடறேன். நீயும் வந்த்துடு” என்று சொல்லிவிட்டு புனி போனை கட் செய்தாள்.

மகிழ்ச்சியில் போனுக்கு ரிஸீவருக்கு வலிப்பது போல் அழுத்தமாக ஒரு முத்தம் தந்து ”யெஸ்” என்று கையை விக்கெட் எடுத்த பௌலர் போல மடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தான்.

*******************

11மணி. போனில் மீண்டும் புனிதா. “என்ன புனி?

“என்ன பார்க்க முக்கியமா ஒரு ஆளு வரேன்னு சொல்லிட்டாங்க. அதனால என்னால படத்துக்கு உன்னோட சொன்ன மாதிரி வரமுடியும்னு தெரியல” என்றாள் புனிதா தயங்கியபடியே.

“அப்ப உன்னால 5 மணிக்கும் வர முடியாதா?” என்றான் சேகர் சற்று சந்தேக படபடப்புடன்.

“இல்ல. 5 மணிக்கு கட்டாயம் மீட் பண்ணறோம். பிராமிஸ்”

அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுக்கு பின் சேகர் “அதனால ஒண்ணும் பிராப்ளம் இல்ல புனி. லெட் அஸ் மீட் அட் 5. ஓகே?”

“ஓகே” என்றது மறுமுனை

********************

மெரீனா - காந்தி பீச். 5 மணி. இன்று அலை சற்று சீற்றத்துடன் கரையை தொட்டுக்கொண்டிருந்தது. காதலர் தினம் என்பதால் இளசுகள் கூட்டம் சற்று அதிகம் தான். அங்கு அங்கு போலீஸ் மப்டி வேறு. சூரியன் வானம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தான்.

சேகர் தன் கருப்பு கலர் பேண்ட்டின் காலை மடித்து விட்டுக்கொண்டு பாதத்தை
மண்ணில் புதைத்து மண்ணை கையால் அதன் மீது வாரிப்போட்டுக்கொண்டு அதற்கு சமாதி கட்டிக்கொண்டிருந்தான்.

மணி 5.05. புனிதா அவன் அருகில் வந்து நின்றாள். நிழலை பார்த்து தலையை திருப்பிய சேகர்.

“வா புனி. உட்காரு” என்றான். சேகர் சற்று நகர்ந்து நினைவில் நின்றவளின் நிழலைக்கூட தொடாமல் அமர்ந்தான்.

அருகில் உட்கார்ந்தவள். கடலை நோட்டமிட ஆரம்பித்தாள்.

சேகர் “நான் உன்கிட்ட மனம்விட்டு பேச வந்திருக்கேன்.”

புனிதா “நானும்தான். மொதல்ல நீயே சொல்லு.” என்றாள்.

”நான் நேராவே சொல்லிடறேன். அன்னோன்ய காதலர்களா இருந்த நாம இவ்வளவு நாள் சரியா பேசம பழகாம இருந்திட்டோம். நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன். ஐ லவ் யூ” என்றான் சேகர் அவள் கண்ணைப்பார்த்து.

”எனக்கும் உன்மீது காதல் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல.” என்றாள் புனிதா தீர்க்கமாக எந்தவித சலனமும் இல்லாமல்.

சேகர் துடித்துவிட்டான். கோபம். நிராசை. அன்பானவர்கள் இப்படி பேசினால் அதுவும் உயிருக்கு உயிரானவள் இப்படி பேசும் போது. அப்பப்பா ரொம்ப வலிக்கத்தானே செய்யும். “அய்யயோ ஏன் இப்படி பேசுகிறாள் இவள்” என்று மனம் கேட்டு அவனை தின்று தீர்த்தது.

முகம் சுருங்கி சேகர் அவளை உற்று நோக்கி “உனக்காக நான் இவ்வளவு வருஷம் காத்திருக்கிறேன் புனி. ஏன் இப்படி சொல்ற?”

புனிதா - “நானும் தான் காத்திருந்தேன். என்ன லாபம் நம்ம ராசியாக ஒரு சின்ன சந்தர்ப்பம் கூட கெடக்கல. ஒவ்வொரு முறை நாம பேசும் போதும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி நமக்குள்ள நாமே விரிசலை ஏற்படுத்திக்கிட்டோம். நீ ஒரு இடத்தில நான் ஒரு இடத்தில வேல செய்யறோம். மீட் பண்ணியே ரொம்ப நாள் ஆச்சு. வீட்ல வேற பையன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் போய் உன்னை பத்தி சொன்னா அம்மாவுக்கு திரும்ப உடம்பு முடியாம போயிடுச்சுன்னா என்ன பண்ண முடியும் சொல்லு?
எனக்கும் உனக்கும் ஒரே வயசு. ஒரு ஆம்பள நீ ரொம்ப நாள் கல்யாணம் ஆகாம இருக்கலாம். ஆனா என்னை என் நிலையில இருந்து யோசிச்சு பாரு உனக்கு புரியும்.” என்றாள் மூச்சு விடாம.

சேகருக்கு இன்னும் அதிர்ச்சிதான். அவள் டபாய்க்கிறாளோ என்றும் சந்தேகம். “அப்ப நாம காதலிச்சது.. ஒருத்தரை ஒருத்தர் புரிச்சிக்கிட்டோம்னு சொன்னது... எல்லாம் பொய்யா?” என்று சேகர் வினவினான்.

புனிதா - “அது அப்போ மெய். இது இப்போ மெய். யார் மேல தப்புன்னு இப்ப டிஸ்கஸ் பண்ண நேரம் இல்ல. இப்ப எனக்கு இந்த வழி சரின்னு பட்டுது. அதனால இதை தேர்ந்தெடுத்தேன். எனக்கும் ரமேஷுக்கும் வர்ற ஜுலை 1ம் தேதி கல்யாணம். ரமேஷ் பெங்களூருல OraWay consulting கம்பெனியில வேல செய்றான். அவன் திடீருன்னு இன்னிக்கு காலைல என்ன பார்க்க வந்துட்டான். நான் இப்பகூட அவனோட தான் சிட்டி செண்டர்ல படம் பார்த்துட்டு வரேன்.”
”அவன்கிட்ட நம்ம மேட்டர் எல்லாம் சொல்லிட்டேன். அவனும் உன்னை பார்க்கணும்னு சொன்னான். நான் தான் நீ எதாவது நினைச்சிக்கிப்போறேன்னு வேணானு சொல்லிட்டேன். அதோ தூர ரெட் சர்ட் போட்டுக்கொண்டு சின்னப்பசங்களோட கிரிக்கெட் விளையாடிக்கினு இருக்கான் பாரு அவன் தான் அது.”

கண்ணீர் ததும்பிய கண்களில் எல்லாம் மங்கலாக தெரிந்தது சேகருக்கு. ஒரு பேச்சும் இல்லை. இனி பேசவும் ஒன்றும் இல்லை.

“சரி அவன் வெயிட் பண்றான். நான் கிளம்பறேன். Good bye" என்று எழுந்து மண்ணை தட்டிக்கொண்டே ரமேஷ் இருந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மெதுவாக தலையசைத்தான் சேகர். அவளின் Good byeக்கு முழு அர்த்தமும் புரிந்தது அவனுக்கு.

-- தொடரும்

<****************************************>

மேலே உள்ள சிறுகதையை படித்துவிட்டு ஒரு வாசகருக்கு மனம் ஒப்பவில்லை. சார் எப்படியாவது காதலை சேர்த்து வையுங்கள் என்று வாதாடினார். அவரையே என் கதைக்கு தொடர் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். என்ன வேகம்! அடுத்த நாளே தனது ஆவலை தீர்த்துக்கொண்டார். அவர் எழுதிய கதை தொடர்ச்சி இதோ - பிரிந்த காதல்... சேர்ந்த போது....

No comments:

Post a Comment