Tuesday, May 26, 2009

’யானை’ முருகன் - சிறுகதை

குறிப்பு: இந்த கதையில் வரும் பெயர்களும் நிகழ்வுகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. எந்தவிததிலாவது இதில் இடம்பெறும் நிகழ்வுகள் உங்களை குறிப்பதாக இருப்பின் அது எதேச்சையானதே. அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த கதையின் உரிமை என்னை சேர்ந்தது. இதை வேறு எங்கும் பிரசுரிக்கவோ, பதிப்பிக்கவோ உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிய படுத்தலாம்.

-------------------------------------------------------

முருகனுக்கு இது நிகழ்ந்திருக்க கூடாதுதான். ஆனால் விதி இன்று விளையாடிவிட்டது. யாரை சொல்லி நோவது.

*****

முருகன் எல்லோர் மத்தியிலும் ‘யானை’ முருகனாக தான் பிரசித்தம். பிள்ளையார்தானே யானைமுகத்தன். அது எப்படி முருகனுக்கு முன் ’யானை’ பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டது? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவனின் உடல்வாகு. அவன் கூட படிக்கும் நண்பர்கள் அவனை இப்படி அழைக்க காரணம். மற்றொன்று சிறுவயதில் இருந்தே மண்டியிட்டபடி குழந்தைகளை எல்லோரையும் முதுகில் யானை ஏற்றுவது அவனுக்கு பொழுதுபோக்கு. அவன் தெருவில் அவன்மீது யானை ஏறாத சிறுவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வெறி.

“டேய் முருகா என் பிள்ள என்கிட்ட கூட வரமாட்டான். ஆனா உன்னை பார்த்ததும் உடனே ஒட்டிக்கிட்டான்டா. யானை பண்ணி மடக்கிட்ட போல” அவன் நண்பன் முத்து கலாய்த்தான்.

முருகன் வயது பசங்களுக்கு எல்லாம் LKG போற குழந்தைகளே இருக்காங்க. இவனுக்கு மட்டும் கல்யாணம் தள்ளி போய் கொண்டே இருக்குது. அதை பத்தியெல்லாம் அவனுக்கு கவலையில்லை. தன் மளிகைக்கடையை விரிவுபடுத்தி பெரிய mall கட்டணும். அது ஒன்றே அவனுக்கு குறிக்கோள். அப்பா இறந்த பிறகு கடைக்கு முழு இன் - சார்ஜ் முருகன் தான். வீட்டு வாசலிலேயே கடை. அம்மா எப்போது கல்யாணம் பற்றி இவனிடம் பேசினாலும். “போமா உனக்கு வேற வேலையில்ல” என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிவிடுவான். கன்னியாக்குமரி வரை தேடியாச்சு. பார்க்காத பொண்ணு இல்ல.  இதுவரைக்கும் ஒண்ணும் அமையல.

நண்பர்களுடன் முருகன் பேசிக்கொண்டு இருக்கும்போதெல்லாம் “நீங்களாச்சும் அவனுக்கு எதாவது புத்திமதி சொல்லுங்கப்பா” என்று சொல்லுவாள் அவன் அம்மா. அன்றும் மோகனுடன் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அம்மா வீட்டுக்கு உள்ளிருந்தபடியே இதையே மீண்டும் ஒருமுறை உரக்க சொன்னாள்.

மோகன் சற்று கடியாகி “டேய் அம்மாதான் இவ்வளவு சொல்லறாங்க இல்ல. எல்லாத்துக்கும் தலையாட்டி வையண்டா. ஏன் பிடிவாதம் பிடிக்கிற.”

“நானா கல்யாணம் வேணாம்னு சொல்லறேன். உனக்கே தெரியும். நான் பன்னெண்டாவது fail. எங்கம்மா நல்லா படிச்ச பொண்ணை பார்த்தா அது வேணங்குது. இல்லையா நான் குண்டா இருக்கிறேன்னு தள்ளிடறாங்க.”

சற்று மௌனத்துக்கு பிறகு மேலும் தொடர்ந்தான் முருகன் “எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லயா என்ன. அடப்போடா. எது தலையில போட்டிருக்கோ அது நடக்கும். கல்யாணத்தை பத்தி ஒரே ஒரு சின்ன ஆசைதான் எனக்கு. என்பிள்ளையை என்முதுகில் தூக்கிக் கொண்டு இந்த ஊர் முழுக்க யானை வரணும்.”

“உன் நல்ல மனசுக்கு உனக்கு ஏத்தா மாதிரி ஒருத்தி கண்டிப்பா கெடப்பாடா” முருகன் கையை பிடித்தபடியே மோகன் சொன்னான்.

*******

நேரம் கைகூடி வர மோகன் சொன்னபடியே முருகனுக்கு சாந்தியுடன் ஜாம் ஜாம் என்று திருமணம். முருகனின் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு. ஒருவர் இன்னொருவருக்கென்றே பிறந்தவர்கள் போல் அவ்வளவு அன்னோன்யமான - மகிழ்ச்சியான வாழ்க்கை. மக்கள் செல்வமும் உண்டானது. ஆளப்பிறந்தவன் போல் ஒரு ஆண்குழந்தை - அயன். மாதங்கள் உருண்டோடின. முருகன் பஜாரில் ஒரு பழைய கடையை விலைக்கு வாங்கி பிஸினஸை விரிவுபடுத்த தொடங்கினான்.

ஒரு நாள் மாலை - “என்னங்க. நீங்க குழந்தைகள யானை ஏத்தறது பிடிக்கும்னு சொல்லி இருக்கீங்க. ஆனா நானும் ஒருவருஷமா சொல்லிகொண்டு இருக்கேன் நம்ம அயனை இதுவரைக்கும் ஒரு தடவ கூட முதுகில ஏத்திகிலயேங்க.” சாந்தி கேட்டாள்.

”ஒரே வேல. கட வியாபாரம் ஒரு பக்கம். புதுக்கடை வேல இன்னொரு பக்கம். இத விட்டு வந்தா தூங்கி எழுந்திருக்க தான் சரியா இருக்கு. திரும்ப மறுநாள் என்ன செய்வதுன்னு யோசிக்கவே டயம் போயிடுது. என்ன செய்ய. சரி நாளைக்கு அயனை தூக்கிகினு ஊர்கோலமே போயிடலாம் விடு” முருகன் சொல்லிக்கொண்டே அரிசி மூட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தான்.

“ஊர்கோலம்லாம் வேண்டாம். வெறும்ன வீட்டுக்குள்ள சுத்திவாங்க அது போதும்” சாந்தி சொல்லிவிட்டு இடுப்பில் அயனை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

*********

மறுநாள் நேரத்தே வீட்டுக்கு வந்தான் முருகன். கை-கால்-முகம் கழுவி காப்பி தண்ணி குடித்தான்.

நேற்று சாந்தி சொல்லிக்கொண்டிருந்ததை உற்று கவனித்து இன்று கரெக்டாக அப்பாவிடம் வந்து

“அப்பா... யான” கொஞ்சு மொழியில் அயன்.

“வாடா ராசா. அதுக்குதான்யா இன்னிக்கு அப்பா சீக்கிரம் வந்திருக்கேன் கண்ணு”

“சாந்தி இங்க வா. புள்ளய தூக்கி முதுகுல வை” முருகன் சமையலறையில் இருந்தவளை கூப்பிட்டான்.

சாந்தியோ - “இதோ வரங்க”

அவள் வருவதற்க்குள் முருகன் யானைபோல காலை முட்டிபோட்டுக்கொள்ள அயன் எக்கி எக்கி முயற்சித்தான் அயன்.

“இருடா தம்பி” என்று சொல்லி அயனை முருகன் முதுகில் உட்கார வைத்து தன் கையால் அயனின் தோள்களை பிடித்துக்கொண்டாள் சாந்தி.

”யான யான. அழகர்யான. யான வந்தது தோப்பிலே...” பாடிக்கொண்டே முருகன் கை கால்களை முன்னோக்கி நகர அயனுக்கு ஒரே குஷி.

அவனோ “போ யான வேகமா போ” என்று அப்பா மீது எம்பி எம்பி குதித்தான்.

“இருடா. யான மெதுவாதாண்டா போகும்” சாந்தி சொல்லிக்கொண்டிருந்த போதே முருகன் தரையில் அப்படியே குப்புற படுத்துவிட்டான்.

“என்னங்க. என்னாச்சு.” சாந்தி பதற்றத்துடன் கேட்டாள். முருகன் பதில் பேசவில்லை. அயனை முதுகில் இருந்து சட்டென்று இறக்கிவிட்ட அவள் முருகனை திருப்ப முயற்சித்தாள்.

“என்னங்க...என்னைய விட்டுட்டு போயிட்டிங்களா” மனதை உருக்கும் ஓல குரலிட்டு அலறினாள் சாந்தி.

**********

No comments:

Post a Comment