Friday, February 08, 2013

மென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)

உலகில் பல கணிணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் உருவாக்க முறைகளை மாற்றியமைக்க தொடங்கியுள்ளனர். வேகமாக மாறிவரும் உலகில், தங்களின் படைப்புக்கள் பயனாளர்களை அல்லது பயன் ஈட்டும் நிறுவனங்களை வேகமாகச் சென்றடைய வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி செய்வதன் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை உணர்ந்த அவர்கள், மென்பொருள் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய நீர்வீழ்ச்சி (waterfall) முறை சில நேரங்களில் பயனளித்த போதும், அது இந்த காலத்திற்கு உகந்ததாக இல்லை என்பதே குற்றச்சாட்டு. மேலும் நீர்வீழ்ச்சி முறையில் தங்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை என்பதை அம்முறையை பல வருடங்கள் கடைபிடித்தபின் உணர்ந்துள்ளார்கள்.

நீர்வீழ்ச்சி முறை மென்பொருள் தயாரிப்பு முறை என்பது என்ன? –  முதலில் பயன் ஈட்டும் நிறுவனங்களின் தேவையை ஒரு குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதில் குறிப்பிட்டவையில், அதிக லாபம் தரக்கூடியது என மென்பொருள் நிபுணர் குழு தீர்மானிப்பதை தயாரிப்புக்கு இன்னொரு குழு எடுத்துக்கொள்வார்கள். பல மாத தயாரிப்பிற்கு பிறகு, அதை இன்னொரு குழு தரச்சோதனை புரியும். அப்படி தரச்சோதனையில் வெற்றி பெற்ற பிறகே அது பயனாளர்களின் கையை அடையும்.

இந்த முறை நன்றாகத்தானே இருக்கிறது. இதை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்கிறீர்களா?

1. இந்த முறையில் பயனார்களின் தேவையை ஆராயும் நேரத்தில் இருந்து அது அவர்கள் கையை அடையும் நேரம் எவ்வளவு தெரியுமா? – கிட்டத்தட்ட எட்டு மாதம் முதல் இரண்டு வருடங்கள் ஆகும். நொடிக்கு நொடி மாறும் பயனாளர்கள் எப்படி வருடம் முழுவதும் காத்திருந்து போன வருடம் எதிர்பார்த்த தேவையை பூர்த்தி செய்து கொண்டதாக என்னமுடியும்?

2. முற்றுபெற்ற மென்பொருளை தரச்சோதனையாளர்கள் தயாரித்த உடனேயே ஆராய்வது இல்லை. இதனால் பல தவறான வழிமுறைகளை முன்னரே கண்டறிந்து தடுக்க வழியில்லாமல் போய் விடுகிறது. மேலும் நாட்கள் செல்ல செல்ல ஓரிடத்தில் தயாரிப்பு குழு செய்த தவறு மென்பொருளில் பல இடங்களிலும் புரையோடி விடுகிறது. அவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டுமெனில் அதற்கு நிர்ணயத்ததை விட அதிக நேரம் பிடிக்கும்.

3. தொடக்கம் முதல் இறுதிவரை பல குழுக்கள் பல்வேறு வேலைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு இடையில் நேரடி கருத்து பரிமாற்றம் நிகழ்வது இல்லை. எழுத்து முறையையே சார்ந்து உள்ளது. அறிந்து ஆராய்ந்தவைகளை எல்லாம் ஏடுகளில் எழுதுவது என்பது இயலாத காரியம். மேலும் ஒருவரின் எழுத்தை படிக்கும் போது அதன் உணர்வுகளும், சொல்லவந்த அர்த்தமும் படிப்பவரின் நிலைப்பொருத்து மாறும். அதனால் பயனாளரின் முழு தேவையும் மென்பொருள் தயாரிப்பில் வடிவமைக்க முடியாது போய் விடுகிறது.

4. பல சமயங்களில் புதிய மாற்றத்தைக் காட்ட, பயனாளர்களுக்கு அதிகம் தேவையில்லாத ஜிகினா வேலைகளில், தயாரிப்பு குழு ஈடுபடுவதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.

5. இந்த முறையில் மென்பொருளின் ஆரம்பம் கட்ட நடவடிக்கைகள் முதல் முடிவு வரை முன்கூட்டியே திட்டமிட்டு முடிவு செய்யவேண்டும். முன்பு கூறியது போல் 8 மாதங்களில் நடக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் முன் கூட்டியே திட்டமிட்டு கூறவேண்டும். இந்த முறையில் திட்டமிடல் மிகவும் சிரமமானது – மேலும் பல மாதங்கள்  அல்லது வருடங்கள் கழித்து வரக்கூடிய இடர்களை முதலிலேயே அறிந்து கொள்ளக்வேண்டிய தேவையும் கொண்டது. இதனால் சாத்தியமற்ற திட்டமிடல் நிகழ்கிறது – அது தோல்வியை தருகிறது.

6. மேலும் மென்பொருள் தயாரிக்க ஆரம்பித்த பிறகு, பயன் ஈட்டும் நிறுவனம் புதிய மாற்றங்களை தாங்கள் நினைக்கும் போது சேர்க்க முடியாது. அது மிகுந்த பலன் தரக்கூடிய மாற்றமாய் இருந்தாலும் அது மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு மேற்ப்படி செலவுகளை பயன் பெறும் நிறுவனத்திடம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.

 

மேலே குறிப்பிட்ட இவைகள், பெரும் பயன்பாட்டில் இருந்த நீர்வீழ்ச்சி முறையில் இருந்த தவறுகள் ஆகும். தற்போது கையாளப்படும் ”படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்” பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

No comments:

Post a Comment