Thursday, November 21, 2013

முயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ–மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ–மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ–மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார்.

“கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ–மெயில் இல்லை என்றால், எப்படி?” என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ–மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ–மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.

உடனே அந்த வங்கி ஊழியர், “இ–மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே? உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ!” என்று ஆச்சரியமாக கேட்டார்.

உடனே, அந்த வெங்காய வியாபாரி, “அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.


No comments:

Post a Comment